யாவாரி

Karthick Ragavendran
3 min readJan 11, 2021

--

நேற்று

‘…பச்சரிசி 5 கிலோ, கோதுமை 1 கிலோ, சக்கரை 500 கிராம், கிளோஸ் அப் பேஸ்ட்..’ சிட்டையை சரி பார்த்து கொண்டிருந்த கடைக்காரர் சண்முகம் நிறுத்தினார் . ‘சிபாகா, கோல்கேட் எல்லாம் இருக்கே. ரெண்டு, மூனு ரூபாய் கம்மியா வரும். அதெல்லாம் ஆகாதா?

பரவாயில்லை இதுவே இருக்கட்டும்.’ தங்கவேலு பதில் கூறினான்.

ம்ம்ம்.. இருக்கட்டும். உங்க அப்பா நமக்கு சாயப்பட்டறைல வேல பாக்கறப்போவே ரொம்ப தோஸ்த்.

ஆமாங்க. அப்பா உங்கள பத்தி சொல்லிருக்காரு.

அப்போ டீ 20 பைசா காபி 25 பைசா. அவரு வாங்கினா டீ வாங்குவாரு. அடுத்தவங்க வாங்கி குடுத்தா காபி சொல்லுவாரு.

கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான் தங்கவேலு. ‘அவரு அப்படி தான்.

அப்பிடி இருந்ததால தான் குடும்பத்தை காப்பாத்த முடிஞ்சுதுன்றேன் . உன்ன மேல படிக்க வச்சது எல்லாம் காசு சேத்து வெச்சதால தானே? ஒரு ரூபா ரெண்டு ரூபா யாவாரம் தானேனு விட்டா கைல காசு தங்காது.

சரி தான் நீங்க சொல்றதும்.

சிபாகா போட்டுருவோமா?’ ஏனோ தங்கவேலு கிளோஸ்-அப் பேஸ்ட் வாங்குவது சண்முகத்திற்கு பிடிக்கவே வில்லை.

இல்லங்க, பையன் ஆசை பட்டான். ஒருவாட்டி வாங்கி தருவோமேனு தான்.

சரி

இப்போல்லாம் டிவி-ல கண்ட விளம்பரம் போட்டு தான் பிள்ளைகளை கெடுக்கிறாங்க.’ கடையில் பொட்டலம் போட்டு கொண்டு இருந்த மணி கூறினான்.

சண்முகம் முகம் வாடியது. ‘டிவி இருக்கோ?’ தங்கவேலுவை பார்த்து கேட்டார்.
டிவி இருக்கும் விஷயம் சொல்லி ஏன் வேதனை படுத்துவானேன் என்று ‘இல்லங்க கூட படிக்கற பையன் வீட்ல பாத்துருப்பான்.

எந்த வீடு?’ சண்முகம் விடுவதாக இல்லை.

எந்த வீட்டில் டிவி இருந்தால் சண்முகம் சந்தோச படுவார்? தங்கவேலு இரண்டு வினாடி யோசித்து விட்டு , ‘கோயில் வாசல்ல கிளினிக் வெச்சிருக்காருல்ல? அவரு வீட்ல...

கிறிஸ்டின் டாக்டர் வீடா?

ஆமாங்க.’ தங்கவேலு கூறினான்.

சண்முகம் முகம் மிகவும் வாடியது. வருத்தத்துடன் சிட்டையில் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார். தங்கவேலுவிற்கு புரியவில்லை. டாக்டர் வீட்டில் டிவி இருப்பதில் என்ன சண்முகத்திற்கு வருத்தம்?

தலை குனிந்த படியே மிகுந்த வேதனையுடன் சண்முகம் கேட்டார், ‘அப்போ பையன மெட்ரிகுலேஷன்ல சேத்துருக்கீங்களோ?

இன்றும் நாளையும்

இருபது ஆண்டுகள் கழிந்தது. கிளோஸ் அப் பேஸ்ட்டிற்கு ஆசை பட்ட சிறுவன் இரு சக்கர வாகனம் வாங்கலாம் என்று விசாரிக்க சென்றான். ஷோரூம் வைத்திருந்தது சிபாகா சண்முகத்தின் மகன்.

என்ன ரேஞ்ல பாக்கறீங்க?

எழுபது என்பது ஆயிரம் ரேஞ்ல

என்ன பர்பஸ் சொல்லுங்க?

பர்பஸ்… ஓட்டறதுக்கு தான்.’ கிளோஸ் அப் சிரித்தான்.

இல்ல அடிக்கடி லாங் எலாம் போவீங்களா? இல்ல லோக்கல்ல ஓட்டறதுக்கு தானா?

லோக்கல் தான்.

ம்ம். கல்யாணம் ஆயிடுச்சா?

இல்ல. இனிமே தான்.

அப்போ கொஞ்சம் நல்ல வண்டியா எடுங்க.

சிபாகா விலை உயர்ந்த வண்டிகள் இருக்கும் பகுதிக்கு சென்றான்.

இந்த வண்டிய பாருங்க. போன வாரம் இந்த பெயின்டர் மகன் எடுத்தான்.

எவ்ளோ வரும் எல்லாம் சேத்து?

2.12 லட்சம். ஈஎம்ஐ போட்டுக்கலாம்.

அவ்ளோ எல்லாம் செட் ஆகாது. ஒரு லட்சத்துக்கு கீழயே பாப்போம்.

ம்ம்… பாப்போம்.’ சொல்லிவிட்டு பாக்கெட்டில் இருந்து போன் எடுத்து யாருக்கோ கால் செய்தான்.

அல்டெரேஷன் குடுத்திருந்தீங்க. அது பத்தி ஒரு டவுட்டு…

‘…’ எதிர் முனையில் குறைவான ஒலியில் பேச்சு.

இந்த சைலென்சர் கேட்ருந்தீங்கல்ல. அந்த முப்பத்தியஞ்சு ஆயிரம் டைப் ஸ்டாக் இருக்குனு சொல்லிருக்காங்க. ஆனா வர ஒரு மாசம் ஆகும்.

‘…’

ஆமாமா. அந்த லெவல் சவுண்ட் ஊர்ல யார்ட்டயுமே கெடயாது. ஒரு நிமிஷம் இருங்க.’ ஸ்பீக்கர் ஆன் செய்தான். ‘சொல்லுங்க?’

… மாதிரி இருக்கணும்.

கேக்கல…

இல்ல.. வண்டி பாக்க மிருகம் மாதிரி இருக்கனும் னு சொல்றேன்.

ஹாஹா. கண்டிப்பா மாத்திடலாம். வண்டி 2 லட்சம் அதுக்கு சேர்மானமே 1.5 லட்சம் பண்ணிருக்கீங்க.’ வந்த 70 ஆயிரம் பார்ட்டியை பார்த்தபடியே கூறினான்.

அவ்ளோ ஆயிடுச்சா?’ 3.5 லட்சம் பார்ட்டி திகைத்தான்

ஊர்ல யார்ட்டயுமே கிடையாது இப்டி.

சரி சரி .அப்போ ஓகே. ஆர்டர் போட்ருங்க. வரட்டும்.

கண்டிப்பா.. கண்டிப்பா..’ புன்னகையுடன் போன் கட் செய்தான்.

இப்போ பேசினது உங்க ஆளுக தான். வயசு கம்மி ஆனா பொண்ணு குடுக்க ரெடியா கேட்டுட்டு இருகாங்க.

ஒகே.

இதெல்லாம் நீங்க தெரிஞ்சிக்கணும்னு தான் ஸ்பீக்கர்ல போட்டேன்.

ம்ம்

இந்த 2 லட்சம் வண்டிய போட்டுருவோமா?

இல்ல.. கொஞ்சம் கம்மியாவே பாக்கலாம்.

சரி

சொல்லி விட்டு மெதுவாக நடந்து ஷோரூம் வாசலில் போய் நின்று கொண்டான். கைகளை தூக்கி நெளிப்பு கொடுத்தான். தங்கவேலு மகன் தனியாக வண்டிகளை பார்த்து கொண்டு உள்ளே நின்றான். சண்முகம் மகன் வாசலை விட்டு இறங்கி போய் தன் வண்டியில் அமர்ந்து ஆன் செய்தான். ஹார்ன் பலமாக அடித்தான். நான்கு முறை ஆக்ஸலரேட்டர்-ஐ கடுமையாக முறிக்கினான். மெதுவாக ஒட்டி சென்று விட்டான்.

சொல்லுங்க சர்.’ உள்ளே இருந்து பொட்டலம் போடும் மணியின் மகன் வந்தான்.

முதலில் இருந்து விஷயத்தை சொன்னான் தங்கவேலு மகன்.

விளம்பரம் எல்லாம் பாக்கிறது இல்லையா நீங்க? இந்த வண்டிக்கே வயசானவங்க தான் மாடலா வர்ராங்க. யூத்தா இருக்கிறப்போ தான் நல்ல வண்டி எல்லாம் ஓட்ட முடியும். வாங்க என் கூட.

மணியின் மகன் ஒரு இளைஞருக்கு இரு சக்கர வாகனம் எந்த அளவுக்கு முக்கியம் என்ற உண்மையை உணர்த்தினான். இரண்டு மணி நேரம் பேசின பிறகு 1.6 லட்சத்திற்கு ஒரு வண்டியை அட்வான்ஸ் கொடுத்து முடித்தான் தங்கவேலு மகன்.

பாத்தாச்சா?’ சண்முகம் மகன் வந்தான்.

அட்வான்ஸே போட்டச்சு.

கொண்டா?’ ஸ்லிப்ஐ வாங்கி பார்த்தான். ‘ம்ம். பரவால்ல. டீ சாப்பிடுவீங்களா?

இல்ல பரவால்ல.

இல்ல இல்ல சாப்பிடறீங்க.

செமயா.. ஸ்பெஷல் மசாலா டீ ரெண்டு.’ கடை ஊழியரிடம் கூறி அனுப்பினான். ‘ஏன் நிக்கிறீங்க? உக்காருங்க.’ புன்னகையுடன் மரியாதையாக சொன்னான்.

தங்கவேலு மகனிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன் மரியாதையை காப்பாற்றிக்கொண்ட திருப்தியுடன் பெருமையாக அமர்ந்தான். சீட்டும் டீயும் கிடைத்தது.

--

--

Karthick Ragavendran
Karthick Ragavendran

Written by Karthick Ragavendran

Fullstack engineer | React, Typescript, Redux, JavaScript, UI, Storybook, CSS, UX, Cypress, CI/CD.

No responses yet